சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 22,731 சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு முதல் பருவ பொதுத்தேர்வு கடந்த 2021 டிசம்பரில் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகி இருந்தது. பின்னர், இரண்டாம் பருவ பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 26 முதல் மே 24 வரை நடைபெற்ற நிலையில், முடிவுகளை மதிப்பீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. அதேபோல, மிக நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இன்று வெளியிட்டது.
இந்நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 22,731 பள்ளிகளைச் சேர்ந்த 21,09,208 மாணவர்கள் தேர்வு எழுதப் பதிவு செய்திருந்ததாகவும், 20,93,978 மாணவர்கள் தேர்வை எழுதியதாகவும், 19,76,668 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை, மாணவர்கள் https://cbseresults.nic.in/ என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
குறிப்பாக, மாணவர்கள் தங்களின் பதிவெண், பள்ளி எண், பிறந்த தேதி, நுழைவுச் சீட்டு எண் ஆகியவற்றைப் பதிவிட்டு https://cbseresults.nic.in/class-tenth/class10th22.htm என்ற இணைய முகவரியில் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். அதன்படி, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வில், ஒட்டுமொத்தமாக 94.40% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் மட்டும் 98.97% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.