மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களான cbseresults.nic.in மற்றும் cbse.gov.in இல் தேர்வு முடிவுகளை பெறலாம்.
சிபிஎஸ்இ நடத்திய 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படித்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 38 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இந்நிலையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 87.98% பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், இது கடந்த 2023 கல்வி ஆண்டு (87.33%) முடிவுகளுடன் ஒப்பிடும் போது 0.65% அதிகரித்துள்ளதாக சிபிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் படி, அகில இந்திய அளவில் திருவனந்தபுரம் 99.91% தேர்ச்சி விகிதத்தை பெற்று முதலிடத்தையும் , 99.04% பெற்று விஜயவாடா இரண்டாவது இடத்தையும் மற்றும் 98.47% தேர்ச்சியை பெற்று சென்னை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் www.cbse.gov.in மற்றும் www.cbseresults.nic.in என்ற இணையத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து வருகின்றனர்.
CBSE 12ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 91.52% தேர்ச்சியும், மாணவர்கள் 85.12% தேர்ச்சியும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 50% தேர்ச்சி பெற்றுள்ளனர். 2023ம் கல்வி ஆண்டை போல 2024ம் ஆண்டு தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகள் 6.40% பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் படி, சிபிஎஸ்சி அரசு பள்ளிகளின் தேர்ச்சி 88.23% மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி 91.24% ஆகவும் உள்ளது.