ஆழ்கடலில் மீன் பிடிக்கும் பாரம்பரிய மீனவர்களுக்கு பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிதியுதவியை மத்திய அரசு வழங்கி வருவதாக மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர்; பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் சமூக பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்கவும் நிதியுதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. மீன்பிடித்தலை அதிகரிக்கும் வகையில், மீன்பிடி படகுகளை மேம்படுத்தவும், புதிய படகுகள் மற்றும் வலைகளை வாங்குவதற்கும் இந்த நிதியுதவி அளிக்கப்படுகிறது. மேலும் தகவல் தொடர்பு, படகுகளின் இருப்பிடம், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவையும் இதில் வழங்கப்படுகின்றன.
பிடித்த மீன்களை பதப்படுத்தும் வசதிகள், மீன்களை கொண்டு செல்லுதல், மீன் சந்தை போன்ற உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கும் இதில் நிதியுதவி வழங்கப்படுகிறது. மீன்வளத்தைப் பெருக்க மழைக்காலத்தில் 61 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த காலகட்டத்தில் பிரத்யேக பொருளாதார மண்டல பகுதிகளில், எல்இடி அல்லது செயற்கை விளக்குகளை கொண்டு மீன்பிடித்தல், இழுவை படகுகள் மூலம் மீன்பிடித்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலிங், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய அறிவியல் ஆய்வில் இந்திய கடற்பகுதிகளில் மீன் வளம் ஆரோக்கியமானதாக உள்ளது என்று தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார்.