கச்சத்தீவை மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததை செல்லாது என அறிவிக்கக் கோரி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஏகே செல்வராஜ் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில், அதன்பின், 5 ஆண்டுகள் கழித்து இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
தமிழ்நாட்டிற்கு சொந்தமான கச்சத்தீவை, கடந்த 1974ஆம் ஆண்டு மத்திய அரசு இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்தது. மேலும் இது தொடர்பாக 1974, 1976ஆம் ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கச்சத்தீவு இலங்கை வசம் சென்ற நிலையில், தமிழ்கா மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டும், சிறைப்பிடிக்கப்பட்டும் வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கைக்கு கச்சத்தீவை கொடுத்த ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்கக் கோரி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஏகே செல்வராஜ் ஆகியோர் கடந்த 2008ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை 2009ஆம் ஆண்டு விசாரித்த சுப்ரீம் கோர்ட், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டது. அதன்பின், இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. இதனால், இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி கடந்த 2012ஆம் ஆண்டில் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தை நாடினார்.
இதனைத் தொடர்ந்து கச்சத்தீவு வழக்கு கடந்த 2020இல் விசாரிக்கப்பட்டது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரிக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், தான், இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா முன்னிலையில் கச்சத்தீவு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது.
Read More : Summer Holiday | இன்றே கடைசி..!! 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடக்கம்..!!