நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பிப்.1ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அப்போது, 35 பொருட்களின் சுங்க வரியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்கிறார். இதனால், பட்ஜெட்டை தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொது பட்ஜெட்டின் போது அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகளில் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது. சில பொருட்களின் விலை குறைப்பும், சில பொருட்களின் விலையை உயர்த்துதல் தொடர்பான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெறும்.
இந்த பட்ஜெட்டில் குறைந்தது 35 பொருட்களுக்கான சுங்க வரியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சுங்க வரியை அதிகரிப்பதால், குறிப்பிட்ட பொருட்களின் இறக்குமதியைக் குறைக்க முடியும். மேலும், அந்த பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முடியும். மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கும் ஊக்குவிக்க முடியும். சுங்க வரியை அதிகரிக்கக்கூடிய அத்தியாவசியமற்ற பொருட்களை அடையாளம் காணுமாறு கடந்த மாதம், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் பட்டியல் கோரப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த பல ஆண்டுகளாக, வருமான வரியில் எந்த நிவாரணத்தையும் மத்திய அரசு வழங்கவில்லை. இந்த ஆண்டு பிரதமர் மோடியின் இரண்டாவது பதவிக்காலத்தின் கடைசி பொது பட்ஜெட் என்பதால் வரி செலுத்துபவர்களும், வயதானவர்களும் ரயில் கட்டணத்தில் விலக்கு கிடைக்குமா? என்று எதிர்பார்த்து உள்ளனர். ரயில்வே அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, ரயில்வேயின் வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் 2022 முதல் டிசம்பர் 2022 வரையிலான முதல் 9 மாதங்களில் ரயில் கட்டணம் மூலம் மட்டும் ரூ.48,913 கோடி வருவாய் கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ரயில்வேயின் வருமானம் 71% அதிகரித்துள்ளது. கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.