அனைவருக்கும் வீடு என்ற பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டமானது, 2015 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், நகர்ப்புறங்களில் வசிக்கும் தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் அனைத்து பருவ நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நிதி உதவியோடு, பயனாளிகளை தேர்ந்தெடுத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.
பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட 118.90 லட்சம் வீடுகளில், 112.22 லட்சம் வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன; இதில் 75.31 இலட்சம் பணிகள் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் வசிக்கும் தகுதி உள்ளவர்கள் அனைவருக்கும் வீடு வழங்குவதை மோடி அரசு கவனத்தில் கொண்டு பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் கொண்டுவரப்பட்டது.
முன்பு 31.03.2022 வரை இருந்த திட்டக் காலம், பின்னர் 31.12.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடனுடன் கூடிய மானியத் திட்டப் பிரிவைத் தவிர, அனுமதிக்கப்பட்ட அனைத்து வீடுகளையும் நிதி முறை மற்றும் செயல்படுத்தும் முறையை மாற்றாமல் முடிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.