ஆயுதப்படைகளின் லட்சக்கணக்கான வீரர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விதமாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜூலை 1, 2019 முதல் ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தின் கீழ் ஆயுதப்படை ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதியத்தை திருத்தியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் 25.13 லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் பயனடைவார்கள் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 01, 2014 முதல் ஓய்வு பெற்ற முதிர்ச்சிக்கு முந்தைய வீரர்களை தவிர, ஜூன் 30, 2019 வரை ஓய்வு பெற்ற ஆயுதப் படைப் பணியாளர்கள், இந்தத் திருத்தத்தின் கீழ் வருவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2018-ம் ஆண்டு பாதுகாப்புப் படைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் சராசரி குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச ஓய்வூதியத்தின் அடிப்படையில், கடந்தகால ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதியம், அதே பதவிக்காலம் கொண்ட அதே தரவரிசையில் மீண்டும் நிர்ணயிக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் கூறியது.