Prize money: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் வெற்றிபெறும் அணிக்கு கிடைக்கும் பரிசுத் தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளன.
துபாய் சர்வதேச மைதானத்தில் வரும் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 2025ம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதாவது, கடந்த 2000 ஆம் ஆண்டு ஸ்டீபன் ஃப்ளெமிங் தலைமையிலான நியூசிலாந்து அணி, நைரோபியில் உள்ள ஜிம்கான் மைதானத்தில் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்திய பிறகு, இரு அணிகளும் சாம்பியன் டிராபி இறுதிப்போட்டியில் மோதுவது இது இரண்டாவது முறையாகும்.
நியூசிலாந்து அணி தனது இரண்டாவது பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது, அதே நேரத்தில் 2013 ஆம் ஆண்டு பட்டத்தை வென்றதன் மூலம் தற்போது இந்தியா மூன்றாவது பட்டத்தை வெல்லும் முனைப்பில் களம்காண்கின்றன. இதனால் இந்த போட்டியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த பிறகு ரோஹித் சர்மா தலைமையிலான அணி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. 2024 டி20 உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற பிறகு, தொடர்ச்சியாக ஐசிசி பட்டங்களை வெல்லவும் அவர்கள் முனைப்புடன் உள்ளனர்.
2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த பிறகு இந்தியாவுக்கு தொடர்ச்சியாக நான்காவது ஐசிசி இறுதிப் போட்டி இதுவாகும். இந்தநிலையில், 2025 ஆம் ஆண்டு இந்தியா-நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி வெற்றியாளர் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
போட்டி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு $6.9 மில்லியன் (தோராயமாக ரூ. 60.06 கோடி) பரிசுத் தொகையை அறிவித்தது, இது 2017ம் ஆண்டு அறிவித்த பரிசுத் தொகையை விட 53% அதிகமாகும். போட்டியில் பங்கேற்பதற்காக அனைத்து அணிகளுக்கும் தலா $125,000 (தோராயமாக ரூ. 1.08 கோடி) உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில், ஒவ்வொரு குழு நிலை வெற்றிக்கும் ஒரு அணிக்கு $34,000 (தோராயமாக ரூ. 2.95 கோடி) வழங்கப்பட்டது.
முதல் சுற்றில் இந்தியா மூன்று போட்டிகளிலும் வென்றது, நியூசிலாந்து இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்தது. இதன மூலம் இந்தியா $102000 (தோராயமாக ரூ. 88 லட்சம்) சம்பாதித்துள்ளது. இதேபோல், நியூசிலாந்து $68000 (தோராயமாக ரூ. 59 லட்சம்) சம்பாதித்துள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 2.24 மில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 19.49 கோடி) பரிசும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 1.12 மில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 9.74 கோடி) பரிசும் வழங்கப்படும்.
மொத்தத்தில், இந்தியா போட்டியில் வெற்றி பெற்றால் 2.46 மில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 21.4 கோடி) பரிசும் கிடைக்கும். நியூசிலாந்து போட்டியில் வெற்றி பெற்றால் 2.43 மில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 21.1 கோடி) பரிசும் கிடைக்கும். மறுபுறம், இறுதிப் போட்டியில் தோற்றால் இந்தியா 1.34 மில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 11.6 கோடி) பரிசும், நியூசிலாந்து 1.31 மில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 11.4 கோடி) பரிசும் பெறும்.