சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து இன்று (ஆகஸ்ட் 17) லேண்டர் பகுதியானது பிரிக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக எல்.வி.எம். 3 – எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான் – 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. சில நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-3 வெற்றிகரமாக பிரிந்து, புவி சுற்றுவட்டாரப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
பூமியைச் சுற்றிவந்த விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. ஆகஸ்ட் 1ஆம் தேதி புவியீா்ப்பு விசையிலிருந்து சந்திரயான்-3 விண்கலம் விலக்கப்பட்டு நிலவை நோக்கிச் செல்லும்படி அதன் பயணப் பாதை மாற்றப்பட்டது. தற்போது நிலவின் தரைப் பகுதியிலிருந்து 153 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 163 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் நிலவைச் சுற்றி வருகிறது.
இந்நிலையில், நிலவுக்கு மிக நெருக்கமான, இறுதிக்கட்ட சுற்றுப்பாதையில் வலம் வரும் சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து லேண்டா் கலன் ஆகஸ்ட் 17ஆம் தேதியான இன்று விடுவிக்கப்படுகிறது. இந்த பணி வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு, லேண்டரின் வேகம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, நிலவில் வரும் 23ஆம் தேதி தரையிறக்கப்படவுள்ளது.