12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாய பேரரசு தொடர்பான அத்தியாயங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நீக்கியதாக தகவல் வெளியானது.. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 12-ம் வகுப்பு வரலாறு பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி முகலாய பேரரசு தொடர்பான அத்தியாசங்களை நீக்கி உள்ளது.. இது CBSE, மற்றும் NCERT பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பிற மாநில வாரியங்கள் உட்பட அனைத்து வாரியங்களின் பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும். திருத்தப்பட்ட பாடத்திட்டம் 2023-24 கல்வியாண்டில் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டது…
12 ஆம் வகுப்பின் வரலாற்று பாடப்புத்தகங்களுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டத்தில், NCERT முகலாய சாம்ராஜ்யத்தின் சில அத்தியாயங்களை நீக்கியதாக கூறப்பட்டது… 12 ஆம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்திலிருந்து – ‘இந்திய வரலாற்றின் கருப்பொருள்கள்-பகுதி II,’ முகலாய அரசர்கள் தொடர்பான அத்தியாயங்கள்; முகலாய நீதிமன்றங்கள் (சி. 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகள்) ஆகியவை தொடர்பான அத்தியாயங்கள் அகற்றப்பட்டன.
இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், முகலாயர்கள் பற்றிய அத்தியாயங்கள் அகற்றப்படவில்லை என்று NCERT தெளிவுபடுத்தியுள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானி இந்த தகவலை மறுத்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ சிபிஎஸ்இ புத்தகங்களில் இருந்து முகலாயர்கள் பற்றிய அத்தியாயங்கள் ‘நீக்கப்படவில்லை.. அது பொய்யான தகவல்..
கடந்த ஆண்டு பாடத்திட்டங்களை குறைக்கும் செயல்முறை இருந்தது, ஏனெனில் கோவிட் காரணமாக, மாணவர்கள் மீது அழுத்தம் இருந்தது.. நிபுணர் குழுக்கள் 6-12 தரநிலைகளில் இருந்து புத்தகங்களை ஆய்வு செய்தனர்.. முகலாய பேரரசு தொடர்பான அத்தியாயம் நீக்கப்பட்டால், அது குழந்தைகளின் அறிவைப் பாதிக்காது, தேவையற்ற சுமையை அகற்றலாம் என்று அவர்கள் பரிந்துரைத்தனர்… ஆனால் தற்போது இந்த விவாதம் தேவையற்றது. இன்றும் 7ம் வகுப்பு புத்தகத்தில் முகலாயர்களின் வரலாற்றை மாணவர்கள் படித்து வருகின்றனர் என்றார்.
“இதனுடன், 11 ஆம் வகுப்பு புத்தகத்தின் பகுதி-2 இல் முகலாயர்களின் வரலாறு பேரரசுகளில் கற்பிக்கப்படுகிறது. மேலும் 12 ஆம் வகுப்பு புத்தகத்தில் முகலாயர்களின் வரலாறு குறித்த 2 அத்தியாயங்கள் இருந்தன, அவற்றில் ஒரு அத்தியாயம் கடந்த ஆண்டு நீக்கப்பட்டது. எனினும் மேலும் ஒரு அத்தியாயம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இந்த ஆண்டு எந்த புத்தகத்திலிருந்தும் எந்த அத்தியாயமும் நீக்கப்படவில்லை..
நாங்கள் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி வேலை செய்கிறோம். இது ஒரு மாறுதல் கட்டம். NEP 2020 உள்ளடக்க சுமையைக் குறைப்பதைப் பற்றி பேசுகிறது. நாங்கள் அதை செயல்படுத்துகிறோம். பள்ளிக் கல்விக்கான NCF (தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு) உருவாக்கப்பட்டு வருகிறது. NEP இன் படி 2024 ஆம் ஆண்டில் பாடப்புத்தகங்கள் அச்சிடப்படும். நாங்கள் இப்போது எதையும் நீக்கவில்லை” என்று தெரிவித்தார்..