Ghibli ட்ரெண்டின் வெற்றியைத் தொடர்ந்து OpenAI தனது AI சாட்போட்டுக்கு ஒரு முக்கியமான அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம், நினைவக செயல்பாட்டை மேம்படுத்துவதாகும். இதன் மூலம், ChatGPT பழைய உரையாடல்களை நினைவில் வைத்துக்கொண்டு, அதற்கேற்ப தனிப்பட்ட பதில்களை வழங்கும் திறனை பெறுகிறது.
முன்னதாக, ChatGPT-யில் நினைவக அம்சம் இருந்தாலும், அதன் செயல்திறன் மிகக் குறைவாகவே இருந்தது. குறிப்பாக, பயனர்கள் நினைவகத்தை கைமுறையாக செயல்படுத்த வேண்டியிருந்தது, மேலும் அது மிகச் சிறிய அளவிலான தகவல்களை மட்டுமே பாதுகாத்து வைத்துக்கொள்ளும் திறனுடன் இருந்தது.
இந்த புதிய அம்சம் யாருக்கெல்லாம் கிடைக்கும்? தற்போது, இந்த நினைவக மேம்படுத்தல் ChatGPT-யின் Plus மற்றும் Pro சந்தாதாரர்களுக்கே மட்டுமே வழங்கப்படுகிறது. வரும் வாரங்களில் இது Enterprise, Team மற்றும் Edu பயனர்களுக்குப் படிப்படியாக விரிவுபடுத்தப்படவுள்ளதாக OpenAI திட்டமிட்டுள்ளது. எனினும், இலவசமான அடிப்படை ChatGPT பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படுமா என்பதைப் பற்றி எந்த உறுதியும் இல்லை.
அதாவது, எல்லா பயனர்களும் இந்த மேம்பாட்டைப் பெறுவார்களா என்பது இன்னும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை. OpenAI இன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், விரைவில் வரவிருக்கும் ஒரு அற்புதமான புதிய அம்சம் குறித்து X இல் தெரிவித்தார்.
தி வெர்ஜ் அறிக்கையின்படி, அடுத்த வாரத்திற்குள் மினி மற்றும் நானோ பதிப்புகளுடன் சேர்த்து GPT-4.1 ஐ OpenAI வெளியிடும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. கூடுதலாக, புதிய ChatGPT வலை பதிப்பில் o3 மற்றும் o4 மாடல்களுக்கான குறிப்புகளை ஆதாரங்கள் கண்டறிந்துள்ளன, அவற்றின் வெளியீடுகளும் விரைவில் வரக்கூடும் என்று கூறுகின்றன.