ChatGPT என்பது செயற்கை நுண்ணறிவு மென்பொருளாகும்.. சமீபகாலமாக இந்த ChatGPT உலகளவில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.. நாம் கூகுளில் ஒரு விஷயத்தை பற்றி தேடினால், அதை பற்றி பல்வேறு ஆப்ஷன்கள் நமக்கு கிடைக்கும்.. ஆனால் இந்த ChatGPT மூலம் தேடினால், நாம் என்ன தேடுகிறோமோ அதை பற்றிய விவரங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் ஆராய்ந்து, நமக்கு தேவையான சரியான விவரத்தை மட்டுமே வழங்கும்.. மேலும் ChatGPT-யின் சுவாரஸ்யமான பதில்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.. இதனால் குறுகிய காலத்திலேயே அதிகமானோர் இந்த ChatGPT செயலியை பயன்படுத்த தொடங்கி விட்டனர்..
இந்நிலையில் தற்போது சைபர் கிரைமினல்கள் பயனர்களை ஏமாற்ற ChatGPT-ஐ பயன்படுத்துகின்றனர். பயனர்களின் முக்கியமான தகவல்கள் மற்றும் பாஸ்வேர்டுகளைத் திருடக்கூடிய பிரத்யேகமாக நிர்வகிக்கப்பட்ட போலி ChatGPTயைப் சைபர் குற்றவாளிகள் பயன்படுத்துகின்றனர் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது..
காஸ்பர்ஸ்கி என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு, பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் விநியோகிக்கப்படும் ChatGPT போல தோற்றமளிக்கும் chatbot ஒன்றை சைபர் கிரைமினல்கள் வடிவமைத்துள்ளனர் என்று கண்டறிந்துள்ளனர், ChatGPT இன் போலி டெஸ்க்டாப் பதிப்பு, Facebook, TikTok மற்றும் Google கணக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் தனிப்பட்ட மற்றும் வங்கித் தொடர்பான நிதித் தகவல் போன்ற தரவுகளை திருடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்…
சமூக ஊடக பயனர்கள் முதலில், ChatGPT என்ற பெயரில் இருக்கும் போலி இணைப்பை கிளிக் செய்ய வேண்டும் என்று கேட்கப்படுகிறார்கள்.. அதை கிளிக் செய்த உடன், பயனர்கள் ChatGPT ஐப் பின்பற்றும் ஒரு போலி வலைத்தளம் திறக்கும்.. Windowsக்காக ஒரு ChatGPT பதிப்பை நிறுவுமாறு கேட்கப்படுகிறது.. அதன் பின்னர் இன்ஸ்டால் செயல்முறை தொடங்குகிறது.. ஆனால் இன்ஸ்டால் செயல்முறை முடியவில்லை என்று ஒரு பிழை செய்தியுடன் திடீரென்று முடிவடைகிறது. ஆனால் இந்த நேரத்தில், பயனருக்குத் தெரியாமல் பயனரின் கணினியில் Trojan என்ற மால்வேர் நிறுவப்படுகிறது..
இந்த Trojan மால்வேர் Chrome, Edge, Firefox, Brave போன்ற பிரபலமான பிரவுசர்களில் சேமிக்கப்பட்ட முக்கியமான தகவல்களை திருடும் திறன் கொண்டது. இது உள்நுழைவுச் சான்றுகளைத் திருடுவதுடன், விளம்பரப் பணத்தின் அளவு மற்றும் வணிகக் கணக்குகளின் தற்போதைய இருப்பு போன்ற கூடுதல் தகவல்களைப் பெற முயற்சிக்கிறது.