ராஜஸ்தான் மாநிலம் நாகவுரில் இளம்பெண் ஒருவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் திருமணம் முடிந்துள்ளது. இவர்களது திருமணம் இரு வீட்டாரின் முன்னிலையில்தான் நடைபெற்றது. இந்நிலையில், இப்பெண் கடந்த மாதம் கணவர் வீட்டில் இருந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மீண்டும் கணவர் வீட்டுக்கு செல்வதாக கூறி, கடந்த ஜனவரி 20ஆம் தேதி அன்று புறப்பட்டுள்ளார். ஆனால், அவர் கணவர் வீட்டிற்கு செல்லாமல் திடீரென மாயமாகியுள்ளார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பெற்றோர் மற்றும் கணவர் வீட்டார் பதற்றம் அடைந்து காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பெண்ணை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே, நாகவுரில் சாலையோரத்தில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. பெண்ணின் உடைகள் தனியாகவும், உடல்கள் சில பாகங்களாகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, உடலை மீட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்டது காணாமல் போன திருமணமான பெண் என்பது உறுதியானது. தொடர் விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த அனோப்ராம் என்ற நபருக்கும் ஏற்கனவே காதல் இருந்துள்ளது. பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணமான பின்பும் இவர்களின் காதல் தொடர்ந்துள்ளது. சம்பவத்தன்று கணவர் வீட்டிற்கு செல்வதாகக் கூறி அவர், காதலனை பார்க்க சென்றுள்ளார்.
அங்கு சில நாட்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். அப்போது திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அனோப்ராம், அப்பெண்ணைக் கொலை செய்து உடலை பல துண்டுகளாக வெட்டி கிணறு உள்ளிட்ட பல இடங்களில் வீசியுள்ளார். இதனையடுத்து கொலையாளி அனோப்ராமை கைது செய்த போலீசார், பெண்ணின் உடல் பாகங்களை மீட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.