சென்னையை அடுத்த புதுபெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (40). இவர், அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மேற்கு மாம்பலம், அண்ணாமலை 3-வது தெருவைச் சேர்ந்த சரண்யா (35) என்ற பெண், சில வருடங்களுக்கு முன்பு முகநூல் மூலம் அறிமுகமாகியுள்ளார். ஒருவருக்கு ஒருவர் செல்போன் எண்களை பரிமாற்றிக் கொண்டு பேச ஆரம்பித்துள்ளனர். நாகராஜ் திருமணம் ஆகாதவர் என்பதால் சரண்யா தானும் திருமணம் ஆகாதவர் எனக்கூறி பழகி வந்துள்ளார்.
இது, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து சரண்யா வீட்டு வாடகை, சொந்த செலவு, மருத்துவ செலவு என தொடர்ந்து நாகராஜிடம் பணம் கேட்டு உள்ளார். காதல் மோகத்தில் நாகராஜும், சரண்யா கேட்கும் போதெல்லாம் ஜீ பே மூலம் பணம் அனுப்பியுள்ளார். இப்படி தொடர்ந்து நாகராஜ் ரூ.14 லட்சம் வரை சரண்யாவுக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில், நாகராஜுக்கு பண பிரச்சனை ஏற்பட்டதால் சரண்யாவிடம் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். அப்போது சரண்யா பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். மேலும், நாகராஜின் செல்போன் எண்ணையும் பிளாக் செய்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டது குறித்து தெரிந்துகொண்ட நாகராஜ், சம்பவம் குறித்து சில நாட்களுக்கு முன்பு பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், சரண்யாவின் செல்போன் எண் சிக்னலை வைத்து அவரை கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது நாகராஜை ஏமாற்றி சரண்யா சிறிது சிறிதாக பெற்ற ரூ.14 லட்சத்தையும் அவ்வப்போது ஆன்லைன் மூலம், ஓட்டலுக்கு சென்று என சாப்பிட்டு செலவு செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முகநூலில் தனது இளம் வயது படத்தை வைத்து நாகராஜை ஏமாற்றி உள்ளார். பின்னர் போலீசார் அவரை கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.