இந்தியாவிலேயே முதல்முறையாக ஐந்து திரைகளை கொண்ட திரையரங்கம் சென்னை விமான நிலையத்தில் துவங்கப்பட்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறது.
பொதுவாகவே மக்கள் விமான நிலையங்கள் சென்றால் தங்களது உறவினர்களை அழைத்து வர, மேலும் விமானத்திற்காக காத்திருக்க வேண்டி இருக்கும்.அந்த நேரங்களை ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கழிக்கும் வகையில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை விமான நிலையத்தில் வணிக வளாகங்கள், கார் பார்க்கிங் வசதிகள், ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள் மற்றும் திரையரங்கங்கள் ஆகியவை வெளிநாட்டிற்கு இணையான தரத்திற்கு அமைக்கப்பட இருக்கின்றன.
இதன் முதல் கட்டமாக நேற்று சென்னை விமான நிலையத்தில் ஐந்து திரைகளைக் கொண்ட பிவிஆர் திரையரங்கம் இந்தியாவில் முதல்முறையாக விமான நிலையத்தில் திறக்கப்பட்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. மேலும் இந்த திரையரங்கங்கள் சென்னை விமான நிலையத்திற்கு வருபவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 1500 பேர் அமர்ந்து திரைப்படங்களை காணும் வகையில் பிரம்மாண்டமான வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரையரங்கத்தை நடிகர் ஆனந்தராஜ், சதீஷ், கூல் சுரேஷ், இயக்குனர் வெங்கி மற்றும் தயாரிப்பாளர் விஜய் பாண்டியா ஆகியோர் திறந்து வைத்தனர். விமான நிலையத்தில் இருக்கும் பயணிகள் புதியதாக கட்டப்பட்டுள்ள இணைப்பு பாலத்தின் மூலம் திரையரங்கிற்கு செல்லும் வகையில் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.