fbpx

ஆசியாவிற்கே பெருமை சேர்த்த ஃபார்முலா 4 கார் பந்தயம்..!! – அரசு பெருமிதம்

சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் தமிழ்நாடு விளையாட்டுத்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக இடம் பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய குறிக்கோள்களை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு ஒவ்வொரு களத்திலும் முத்திரைகள் பதித்து வருகிறார். அந்த வகையில் சனி, ஞாயிறு இரண்டு நாள்களும் நடைபெற்று முடிந்துள்ள ஃபார்முலா 4 கார் பந்தயம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து வெளியிட்ட வலைதளப் பதிவில், “ஃபார்முலா 4 சென்னை கார் பந்தயத்தை மாபெரும் வெற்றியடையச் செய்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்” என்று குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.

தெற்கு ஆசியாவிலேயே இதுவரை நடைபெறாத மிக நீளமான சாலை கார் பந்தயம் இது என்னும் பெருமை இந்த பார்முலா 4 கார் பந்தயத்திற்கு உண்டு. இந்த 3.5 கி.மீ. நீள கார் பந்தயப் பகுதியில் மொத்தம் 19 வளைவுகள் இருந்தன. பந்தய இடம் சென்னை மாநகரில் தீவுத் திடலில் தொடங்கி, போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தாசாலை, அண்ணாசாலை வழியாக 3.5 கி.மீ., தூரத்தைக் கடந்து தீவுத் திடலிலேயே வந்து முடிவதாக இருந்தது. விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் இந்தப் போட்டியை நடத்துவதில் தனிக் கவனம் செலுத்தி முறையாகத் திட்டமிட்டு எந்தவித இடையூறுமின்றிப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திடும் ஆர்வத்துடன், போட்டி நடைபெறும் பகுதியில் இரவிலும், பகலிலும் வருகை தந்து பார்வையிட்டு அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

ஃபார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயம் தனி நபராகவும், இந்தியன் ரேசிங்லீக் அணியாகவும் நடத்தப்பட்டது. ஃபார்முலா எப்4 பந்தயத்தில் சென்னை டர்போ ரைடர்ஸ், கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங், ஸ்டுடெமான்ஸ் டெல்லி, பெங்களூரு ஸ்பீடெஸ்டர்ஸ், ஷ்ராச்சிராஹ் பெங்கால் டைகர்ஸ், ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ், அகமதாபாத் ரேசர்ஸ், காட்ஸ்பீடு கொச்சி ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டன.

ஓர் அணிக்கு 2 வீரர்கள் வீதம் 16 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு அணியிலும் 2 கார்கள் பயன்படுத்தப்பட்டன. இந்திய ரேசிங் லீக் பந்தயத்தில் (ஐ.ஆர்.எல்) 6 அணிகள் கலந்து கொண்டன. ஒரு அணியில் 4 பேர் இடம் பெற்றனர். இதில் ஒவ்வொரு அணியிலும் தலா ஒரு வீராங்கனை இடம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் 18 வீரர்கள். 6 வீராங்கனைகள் என மொத்தம் 24 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு அணியிலும் 2 கார்கள் வீதம் 16 கார்கள் பயன்படுத்தப்பட்டன.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கார் பந்தயத்தின் பயிற்சியை முதல்நாள் சனிக்கிழமையன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். முதல் நாளில் வீரர்கள் பயிற்சிகளில் மட்டுமே ஈடுபட்டனர். இரண்டாவது நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தகுதிச் சுற்று மற்றும் பிரதான பந்தயங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளன.

தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடித்த ஆஸ்திரேலிய வீரர் ஹக்பார்ட்டரே பந்தய தூரத்தை 19:50.952 வினாடிகளில் கடந்து இலக்கை அடைந்து போட்டியில் முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றார். இந்தியாவின் ருஹான் ஆல்வா பந்தய தூரத்தை 19:50.251 வினாடிகளில் இலக்கை அடைந்து இரண்டாவது இடம் பிடித்து வெற்றி பெற்றார். மூன்றாவது இடத்தில் பெங்களூரு ஸ்பீடெஸ்டர்ஸ் அணியில் அபய் மோகன் 20:09.021 வினாடிகளில் இலக்கை அடைந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன் ஷிப் போட்டியுடன் இந்தியன் ரேசிங் லீக் போட்டியில் ஜே.கே.ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியும் நடைபெற்றது. பிற்பகலில் தொடங்கி மின்னொளியில் இரவு வரை நடைபெற்ற இந்தப் பந்தயம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. பார்வையாளர்கள் போட்டிகளை ரசித்து ஆரவாரம் செய்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. ரசிகர்கள் அதிக அளவில் குவிந்ததால் இந்த கார் பந்தயக் கொண்டாட்டத்தால் அந்தப் பகுதியே அதிர்ந்தது.

இறுதியாக வெற்றி பெற்றவர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். அப்போது உரையாற்றுகையில், “சென்னையில் நடைபெற்று முடிந்துள்ள இந்த கார் பந்தயத்திற்குப் பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள இந்தக் கார் பந்தயப் போட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனைகளைப் பெற்று அடுத்த ஆண்டிலும் தொடர்ந்து நடத்துவது குறித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறினார். இந்தப் போட்டிகளில் இங்கிலாந்து, போர்சுக்கல், செக்குடியரசு. பெல்ஜியம். டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.

கார் பந்தயங்களில் உலக நாடுகளில் பலமுறை பங்கேற்று வெற்றிகள் கண்ட அனுபவங்களுடன் இந்தியாவின் முதல் ஃபார்முலா ஒன் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் ஃபார்முலா 4 கார் பந்தயம் குறித்துக் கூறும்போது, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வையில், ஆற்றல்மிக்க விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்தியன் ஃபார்முலா 4 சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் சுற்றுகளுடன் இரவு நேர வீதிப் பந்தயத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த முன்முயற்சி இந்திய கார் பந்தய வீரர்களுக்குச் சர்வதேசத் தளத்தில் போட்டியிடுவதற்கு ஒரு முக்கியமான தளத்தை வழங்கும்; மேலும் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் அவர்களின் திறன்களைக் கூர்மைப்படுத்தவும் விலைமதிப்பற்ற அனுபவத்தைப் பெறவும் உதவுகிறது.

இந்த நிகழ்வு இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உயர்மட்ட பந்தயத்திற்கான மையமாகத் தமிழ்நாட்டை நிலைநிறுத்தும். தெற்காசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் சென்னை இந்தப் பந்தயத்தை நடத்துவது மேலும், சிறப்பாகும்” என்று கூறி தமிழ்நாடு அரசைப் பாராட்டியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முழு முயற்சி செய்து மிகுந்த ஈடுபாட்டுடன் முன்னின்று நடத்திய சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் தமிழ்நாடு விளையாட்டுத்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக இடம் பெற்றுவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more ; அசுர வேகத்தில் பூமியை நெருங்கும் விண்கல்.. மோதினால் உலகமே அழியும் அபாயம்..!! – NASA எச்சரிக்கை

English Summary

Chennai Formula 4 car race has marked a major milestone in the history of Tamil Nadu sports industry, said the Tamil Nadu government.

Next Post

மத்திய அரசு அதிரடி...! பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய SHe-Box இணையதளம்...!

Mon Sep 2 , 2024
SHe-Box website that ensures workplace safety for women

You May Like