கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நகராட்சி தேர்தலில் சென்னை மாநகர மேயராக பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டார். இதுவரையில் தமிழக அரசியல் சரித்திரத்திலேயே 28 வயதில் மேயரானது இவர் மட்டும்தான். அதோடு சென்னையின் முதல் பெண் மேயர் என்ற பெயரையும் இவர் பெற்றார்.
அதோடு இவருக்கு அரசியல் அனுபவம் அவ்வளவாக இல்லை என்றாலும் மூத்த அமைச்சர்கள் பலர் இவர் அருகில் இருந்து இவரை வழிநடத்த தொடங்கினர். அதன் பிறகு இவருடைய செயல்பாடு நல்ல நல்ல வேகம் எடுக்க தொடங்கியது. அதோடு முதல்வர் ஸ்டாலினிடமும் நற்பெயர் வாங்க தொடங்கினார்.
இந்த நிலையில் தான் பொதுமக்களுடைய குறைகளை கேட்டறிந்து அவற்றை உடனடியாக தீர்த்து வைக்கும் விதமாக மக்களை தேடி மேயர் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் ஒவ்வொரு மண்டலமாக பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்த்து வைக்க இருக்கிறார். அந்த விதத்தில் இன்று அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட பொதுமக்களிடையே குறைகளை கேட்க உள்ளார்.
எல் பி சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையில் சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் பொதுமக்களிடம் நேரடியாக அவர்களுடைய மனுக்களை பெற உள்ளார். இதன் காரணமாக, அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களுடைய பகுதியில் நிலை வரும் பிரச்சினைகள் தொடர்பாக மேயருடன் உரையாடி மனு வழங்கி பயன்பெறுமாறு மாநகராட்சி சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. மேயரிடம் நேரடியாக மனு வழங்க முடியும் என்பதால் மக்களை தேடி மேயர் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக சென்னை மாநகராட்சி வாசிகள் தெரிவித்து வருகிறார்கள்.