இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசலுக்கு வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு சென்னை காவல்துறை வலியுறுத்தி உள்ளது.
கடந்த மாதம் 23-ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் தரப்பில் கொண்டு வந்த 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாக சி.வி.சண்முகம் அறிவித்தார்.. பின்னர் ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பாக பொதுக்குழு நடைபெறுவதாக கூறி, ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார். அதன் பின்னர் ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் தரப்பினர் தனித்தனியாக தீவிர ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். பிறகு ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை அடைந்து, உச்சநீதிமன்றத்துக்கும், சென்னை உயர்நீதிமன்றத்துக்கும் சென்றது.
அதிமுக பொதுக்குழு நடத்துவது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது. கடந்த மாதம் 23-ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழுவினால் பூவிருந்தவல்லி- மதுரவாயல் இடையே நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். மேலும் வாகன விபத்துக்களும் நிகழ்ந்தது. இந்த நிலையில் இன்று வானகரத்தில் நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுவை ஒட்டி கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரையிலான சாலையில் அதிக வாகனங்கள் செல்லக்கூடும் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பாக வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாகன ஓட்டிகள் பூந்தமல்லி முதல் கோயம்பேடு வரையிலான சாலையில் இன்று காலை மாலை 04.00 மணி வரையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாத வண்ணம்,தங்களது பயணங்களை முன்னேற்பாடாக மாற்றி அமைத்துக் கொள்ளவும், மாற்று பாதையில் செல்லவும் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Also Read: இந்தியாவில் சமஸ்கிருத மொழியை கற்பதற்கு மக்கள் இயக்கம் தொடங்க வேண்டும்- குடியரசு துணைத்தலைவர்