தமிழகத்தின் கிராமங்களில் இருந்து தலைநகர் சென்னைக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக தெரிவித்து, அடுக்குமாடி குடியிருப்புகள் பங்களா வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று அங்கே தங்க வைத்து அவர்களை கட்டாயத்தின் பேரில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் விதத்தில், சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் அடிப்படையில், அவ்வபோது காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி விபச்சார இடைத்தரகர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இத்தகைய நிலையில், சென்னை மயிலாப்பூர் சிவி ராமன் சாலையில் இருக்கின்ற தனியார் தங்கும் விடுதி ஒன்றில் வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.
அதன் பேரில் காவல்துறையினர் அந்த விடுதியை ரகசியமாக கண்காணித்ததில் விபச்சார தொழில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் அந்த விடுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரைகுறை ஆடைகளுடன் கென்யா நாட்டைச் சேர்ந்த 4 இளம் பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, விடுதி காப்பாளர் மற்றும் விடுதி உரிமையாளர் உள்ளிட்ட இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.