கோழியை காப்பாற்ற சென்ற பள்ளி மாணவன், கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் குன்றத்தூர் நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் கோபால் என்பவர் வேலை பார்த்து வருகிறார். ஆனால், இவருக்கு கை, கால்கள் செயலிழந்த நிலையில், தனது குடும்பத்தினருடன் அங்கு தங்கி தோட்டத்தை பராமரித்து வந்துள்ளார். கோபாலின் மகன் சந்தோஷ்குமார். இவருக்கு வயது 14. சிறுவன் சந்தோஷ் வழக்கம்போல காலை பள்ளிக்குச் செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தான்.
அப்போது, தோட்டத்தில் வளர்க்கப்படும் கோழி ஒன்று கிணற்றின் மீது நின்று கொண்டிருந்தது. கோழி தவறி கிணற்றுக்குள் விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் அதை பிடிக்க முயன்றுள்ளான் சந்தோஷ். அப்போது, திடீரென சந்தோஷின் கால் தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்தான். இதனைப் பார்த்த பெற்றோர், கத்தி கூச்சலிட்ட நிலையில், அங்கு வந்த உறவினர்கள் சிறுவனை மீட்க முயன்றனர்.
ஆனால், அது பலன் தராததால், உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சிறுவன் சந்தோஷை சடலமாக மீட்டனர். சிறுவனின் உடலைப் பார்த்ததும் பெற்றோர் கதறி அழுதனர். பின்னர், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சந்தோஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.