சிதம்பரம் கோயில் நகை சரிபார்ப்பு ஆய்வை தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தீட்சிதர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்…
புகழ்பெற்ற சிதம்ரம் நடராஜர் கோயில் தற்போது தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.. இந்நிலையில் இந்த கோயில் சட்ட விதிகளின் படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்தும் கோயில் நிர்வாகத்தை சீரமைப்பது குறித்தும் ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டது.. அதன்படி கடந்த ஜூன் மாதம் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் அறநிலையத்துறை ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது கோயில் நிர்வாக கணக்கு விவரங்கள், வரவு செலவு விவரங்கள் குறித்து அதிகாரிகள் கேட்டனர்.. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கோயில் கணக்குகளை பராமரித்து வருவதாக கூறினர்.. மேலும் கோயிலில் ஆய்வு நடத்த அறநிலையத்துறை சட்டரீதியாக அணுகவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்..
இதனிடையே இந்த ஆய்வுக்கு தீட்சிதர்கள் சரியான ஒத்துழைப்பு தராததால், திட்டமிட்டப்படி ஆய்வு நடைபெறவில்லை என இந்து சமய அறநிலையத் துறை ஆய்வு குழு தெரிவித்தது. மேலும், இந்த ஆய்வு சம்மந்தமான அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் சமர்பிக்க இருப்பதாகவும் அதன் பின் சட்டபடியான நடவடிக்கை மேற்கொள்ள போவதாகவும் ஆய்வுக்கு வந்த விசாரணை குழுவினர் தெரிவித்தனர்.
இந்த சூழலில் சிதம்பரம் நடராஜ கோயில் நகைகளை ஆய்வு செய்ய வரும் 25-ம் தேதி வருவதாக இந்து அறநிலையத்துறை கடிதம் அனுப்பி இருந்தது.. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சார்பில் கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.. அதில் சிதம்பரம் கோயில் சரிபார்ப்பு ஆய்வை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.. முக்கிய தீட்சிதர்கள் சில வேத பாராயண நிகழ்ச்சிகளுக்காக வட இந்தியா சென்றுள்ளனர் என்றும், வழக்கறிஞர், தணிக்கையாளர் வெளியூர் சென்றுள்ளதால் நகை சரிப்பார்ப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஆகஸ்ட் 2-வது வாரத்திற்கு பின் நகை சரிபார்ப்பு ஆய்வை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆகஸ்ட் 2-வது வாரத்துக்கு பின் ஆய்வு நடத்தினாலும், முன்கூட்டியே தேதியை அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் முன்கூட்டியே தெரிவிக்காமல் நகை ஆய்வுக்கு வருவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது..