முதலமைச்சர் முக.ஸ்டாலின் நாளைய தினம் அரிட்டாபட்டிக்கு செல்ல உள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். பல அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இந்நிலையில் தான், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக நாளைய தினம் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெறுகிறது.
அரிட்டாப்பட்டியில் நாளை (ஜனவரி 26) நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மக்கள் அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பினை ஏற்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் நாளை அரிட்டாப்பட்டி செல்லவுள்ளார். நாளை குடியரசு தின விழா கொடியேற்றம் நிறைவடைந்த பிறகு aங்கு செல்கிறார். இதன் காரணமாக, ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது.