பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கருவுற்ற சமயத்திலும், குழந்தை பிறந்த பிறகு அதை நன்றாக கவனித்துக் கொள்ளவும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படுகிறது. மகப்பேறு சலுகை சட்டத்தின் படி, இதன் பலனை முழுதும் பெற உரிமையுள்ள பெண்கள், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில், 6 மாத காலத்திற்கு மகப்பேறு விடுப்பு எடுக்க அவர்கள் விண்ணப்பிக்கலாம். பெண் பணியாளர்கள் தங்களின் மகப்பேறு விடுப்பை குழந்தை பிறப்பதற்கு முன்போ அல்லது குழந்தை பிறந்த பிறகோ எடுத்துக் கொள்ளலாம். இந்த விடுப்பு காலத்தில் பெண் பணியாளர்களின் முழு சம்பளத்தையும் நிறுவனங்கள் வழங்க வேண்டும்.
இந்த நிலையில், பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில், காவல் துறை சார்பில் நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அவர் பேசுகையில், தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. கணவர், பெற்றோர் வசிக்கும் இடங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு பணிமாறுதல் வழங்கப்படும். ‘மகப்பேறு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும்போது பெண் காவலர்களுக்கு விரும்பும் இடங்களில் பணி வழங்கப்படும். மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள் அவர்களின் சொந்த ஊரில் 3 ஆண்டுகள் பணியாற்ற அனுமதி என அவர் பேசியுள்ளார்.