திருச்சியிலிருந்து 144 பயணிகளுடன் மாலை 5.40 மணிக்கு ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2 மணி நேரமாக வானத்தில் வட்டமிட்டு வந்தது. விமானத்தில் எரிபொருளை குறைக்கும் முயற்சியாக விமானம் வானில் வட்டமடித்து வந்ததாக கூறப்பட்டது.
விமானம் தரையிறங்கும் நேரத்தில் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டன. மேலும் விமான நிலையத்தில் தீயணைப்புத் துறை வீரர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தயார் நிலையில் இருந்தனர். விமானம் சரியாக இரவு 8.15 மணிக்கு தரையிறக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 8.15 மணிக்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 144 பயணிகளுடன் 2 மணி நேரமாக வானில் வட்டமிடுத்து கொண்டிருந்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் பதிவில், “ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பத்திரமாக தரையிறங்கியதைக் கேள்விப்பட்டு மனம் நெகிழ்ந்தேன். தரையிறங்கும் கியர் பிரச்சினை பற்றிய செய்தி கிடைத்ததும், நான் உடனடியாக தொலைபேசியில் அதிகாரிகளுடன் அவசரக் கூட்டத்தை ஒருங்கிணைத்து, தீயணைப்பு இயந்திரங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ உதவிகளை அனுப்புவது உட்பட தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்த அறிவுறுத்தினேன்.
மேலும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மேலும் உதவிகளை வழங்கவும் மாவட்ட ஆட்சியருக்கு நான் இப்போது உத்தரவிட்டுள்ளேன். பாதுகாப்பாக தரையிறங்கிய கேப்டன் மற்றும் குழுவினருக்கு எனது பாராட்டுகள்” என பதிவிட்டுள்ளார்.
பாதுகாப்பாக தரையிறங்கிய விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் விமானத்திலேயே உட்கார வைக்கப்பட்டுள்ளனர். யாரும் அச்சம்கொள்ளது தேவையில்லை அனைவரும் பத்திரமாக வெளியே கொண்டுசெல்லப்பிடுவீர்கள் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.