2030-31ம் நிதி ஆண்டுக்குள் தமிழ்நாட்டை1 ட்ரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக உயர்த்த தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10, 11ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. இதனையடுத்து முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாள் பயணம் மேற்கொள்கிறார்.
சென்னையிலிருந்து இன்று காலை 11.25 மணிக்கு புறப்பட்டு, சிங்கப்பூர் செல்கிறார். அங்கு அந்நாட்டு போக்குவரத்து, தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரன், உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் சண்முகம் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார். டெமாசெக், செம்கார்ப், கேப்பிட்டாலேண்ட் இன்வெஸ்ட்மென்ட் ஆகிய தொழில் நிறுவவனங்களின் உரிமையாளர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார். சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலை நிகழ்ச்சியிலும் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
அதன்பிறகு வருகிற 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஜப்பான் நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு முன்னணி தொழில் துறைத் தலைவர்களை சந்தித்து உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்க உள்ளார். மேலும் அங்கு நடைபெறும் முதலீட்டு ஊக்குவிப்பு மாநாட்டில், பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.