முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்துக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க ஏதுவாக ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்கும் வகையில் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற திட்டம் தொடங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த திட்டத்தின் மூலம் முன்னாள் படை வீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படும்.
இத்திட்டத்தின்படி தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை 30% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என மீதமுள்ள தொகையை 3% வட்டியுடனும் திரும்பச் செலுத்தலாம். அதேபோல், திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். ராணுவப் பணியின்போது உயிரிழந்த படை வீரர்களின் குடும்பத்தினரும் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க கடனுதவி பெறுபவர்கள் www.exwel.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முன்னாள் படைவீரர்கள் / படை வீரர்களை சார்ந்த வாரிசுகள், கைம்பெண்கள் ஆகியோர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.