வெடிமருந்து உரிமம் வழங்கப்பட்ட தொழிலகங்களில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் எவரும் பணிபுரிய கூடாது.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாவட்டத்தில், வெப்ப அலை காரணமாக தீ விபத்துகள் நேரிடும் வாய்ப்பு உள்ளதால் மருத்துவமனைகளில் உள்ள மகப்பேறு, அவசர சிகிச்சை, குழந்தைகள் சிகிச்சைகள் உள்ளிட்ட பிரிவுகளில் மின் இணைப்பு பாதிப்பு ஏற்படாத வகையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், மின் இணைப்பு பாதிப்பு ஏற்படும் நேர்வில், உடனடியாக மருத்துவ சேவையை தொடரும் வகையில், Generator உள்ளிட்ட சாதனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமெனவும், வெப்ப அலை காரணமாக பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்கவும், வெப்ப அலை குறித்து முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், மாவட்டத்தில் பட்டாசு உற்பத்தி செய்யும் மற்றும் சேமித்து விற்பனை செய்ய உரிமம் பெற்றுள்ள உரிமதாரர்கள் மற்றும் வெடிபொருட்கள் சேமித்து விற்பனை செய்யும் உரிமதாரர்கள் (LE 01 &LE 03) உற்பத்தி நிலையங்கள் மற்றும் சேமிப்பு கட்டிடங்களில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும், அனைத்து வெடிமருந்து உற்பத்தி நிலையங்களிலும் தீயணைப்பு உபகரணங்கள் வைத்திருக்க வேண்டுமெனவும், அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு அவற்றை கையாள முறையான பயிற்சி அளித்திருக்க வேண்டுமெனவும், தீயணைப்பு உபகரணங்கள் காலாவதியான பின் முறையாக அழிக்கப்பட வேண்டும்.
மேலும் வெடிமருந்து உரிமம் வழங்கப்பட்ட தொழிலகங்களில் 18 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் எவரும் பணிபுரிய கூடாது. இதனை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், வருவாய் கோட்ட அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமெனவும், தீ மற்றும் வெடிமருந்து விபத்துகள் ஏற்படா வண்ணம் வெடி மருந்து கிடங்குகள் குறிப்பிட்ட கால இடைவெளியில், காவல் துறை, வருவாய்த்துறை, தீ அணைப்பு துறையினரால் முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டுமெனவும், தற்போது கோடை காலமாக உள்ளதால், பட்டாசு வெடி விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.