சீனாவில் தினசரி கொரோனா பலி எண்ணிக்கை 10,000 ஆக பதிவாகும் நிலையில், சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கொரோனா பரிசோதனை செய்ததற்கான சான்றிதழை தங்களுடன் கட்டாயம் கொண்டு வரவேண்டும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இதுவரை 25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்ட நிலையில், குவித்து வைக்கப்பட்ட வீடியோக்கள் அதிர்ச்சியடைய வைத்தன. தினமும் தொற்று அதிகரித்து வரும் நிலையில், சீன பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் விதித்துள்ளன.
இந்த நிலையில் அமெரிக்காவும் சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகள் கொரோனா பரிசோதனை சான்றிதழை தங்களுடன் கட்டாயம் கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் ஜனவரி 5-ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. சீனாவின் வெளிப்படையற்ற தன்மையால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.