செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Ernie என்ற மென்பொருளை சீனாவின் பைடு என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சாட்ஜிபிடி அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் சாட்ஜிபிடி அறிமுகமான சில நாட்களிலேயே பல கோடி பயனாளர்களை பெற்று சாதனை படைத்தது. இது இணையத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் கூகுள் இதற்கு போட்டியாக கூகுள் பார்டு-ஐ உருவாக்கியிருக்கியது. கூகுள் மட்டுமின்றி வேறு சில தொழில்நுட்ப நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்கி வரும் நிலையில் இப்போது சீனாவும் இதில் களமிறங்கியுள்ளது. சீனாவில் உள்ள பைடு என்ற நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Ernie என்ற மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது.
இதில் தொழில், மருத்துவம், கல்வி, தொலைத்தொடர்பு, போக்குவரத்து, சுற்றுலா, பொழுதுபோக்கு உள்பட பல்வேறு அம்சங்கள் அமைந்துள்ளதாகவும் இது ஒன்று கையில் இருந்தால் உலகத்தில் உள்ள அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம் என்றும் பைடு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பைடு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறியதாவது: 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்து இந்த மென்பொருளை தயாரித்துள்ளதாகவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டுள்ள இந்த எர்னி மென்பொருள் பல்வேறு கட்டங்களுக்கு பிறகு புதிய வடிவத்தை பெற்றுள்ளது என்றும் இதுவரை 650 நிறுவனங்கள் இந்த மென்பொருளை பயன்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சீனாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த மென்பொருளை வர்த்தகம் செய்ய பைடு நிறுவனம் திட்டமிட்டுள்ளது