இந்தியர்களை தலைமை நிர்வாக அதிகாரிகளாகவும், சிஓஓ-க்களாகவும் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் நியமிக்க வேண்டும் என்று சீன மொபைல் போன் உற்பத்தியாளர்களிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
சீன மொபைல் போன் உற்பத்தியாளர்களை தங்கள் உள்ளூர் நடவடிக்கைகளில் இந்திய பங்கு பங்குதாரர்களை சேர்க்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதாவது, சீன மொபைல் போன் தயாரிப்பாளர்கள், இந்தியாவில், அவற்றின் வணிக நடவடிக்கைகளை நிர்வகிக்கும் முக்கிய பொறுப்புகளில் இந்தியர்களை அமர்த்துமாறு, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், அண்மையில் சீன மொபைல் போன் தயாரிப்பாளர்கள் மற்றும் ‘இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்’ கூட்டமைப்பினர் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினர். இக்கூட்டத்தில் சீன மொபைல்போன் தயாரிப்பாளர்களான ‘ஷாவ்மி, ஓபோ, ரியல்மி, விவோ’ உள்ளிட்ட பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், சீன மொபைல் போன் நிறுவனங்கள் அவற்றின், இந்திய வணிகத்தில், தலைமை செயல் அதிகாரி, தலைமை தொழில்நுட்ப அதிகாரி உள்ளிட்ட உயர் பொறுப்புகளுக்கு இந்தியர்களை நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்தியாவைச் சேர்ந்த ஒப்பந்த உற்பத்தியாளர்களை நியமிக்கவும், இந்திய வணிக நிறுவனங்களின் கூட்டுமுயற்சியுடன் உற்பத்தியை பெருக்கவும், உள்ளூர் வினியோகஸ்தர்களை வேலைக்கு அமர்த்தவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சீன நிறுவனங்கள், இந்தியாவில் வரி ஏய்ப்பு முயற்சிகளில் ஈடுபடக்கூடாது என்றும், சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.