2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தயாராகி வருகிறது அதிமுக. இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டும் எனவும், மாவட்ட செயலாளர்களை கண்காணித்து அவர்களது பணி திருப்தியாக இருக்கிறதா என்பது குறித்து அறிக்கை கொடுக்க வேண்டும் என மூத்த நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.
இக்குழுவில், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, அமைப்பு செயலாளர்கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ.செம்மலை, அ.அருணாசலம், மகளிரணி செயலாளர் பா.வளர்மதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடந்த 11ஆம் தேதி இக்குழு கூட்டம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிலையில், அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், திருநெல்வேலியில் அதிமுக களஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் கள ஆய்வு கூட்டத்திற்கு வந்திருந்த நிலையில், அவர்கள் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம்-மோதல் : அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்ற நிலையில், தற்போதைய மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா, கட்சிப்பணிகளை சரிவர செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் இன்றைய கூட்டத்தில் இருதரப்பு தொண்டர்கள் வாக்குவாதம் செய்துகொண்டு, மோதலில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் கலந்துகொண்ட கூட்டத்தில் இருதரப்பு மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட காரணத்தால், அங்கு பரபரப்பு சூழல் உண்டாகி இருக்கிறது. நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா மற்றும் கொள்கை பரப்பு அணி நிர்வாகிகள் இடையே இந்த மோதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
Read more ; நாளை இண்டர்வியூ.. அழைக்கும் Cognizant நிறுவனம்.. சென்னை கோவையில் வேலைவாய்ப்பு..!!