ஒமைக்ரான் மாறுபாடு கொரோனா பி.எஃப் 7 வகை கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
சீனாவில் காணப்பட்ட ஒமைக்ரான் மாறுபாடு கொரோனா பி.எஃப் 7 வகை திரிபு வைரஸ் இந்தியாவில் குஜராத் மாநிலம், வதோதரா மற்றும் அகமதாபாத் நகரங்களில் 2 பேருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் என மொத்தம் 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாறுபாடு, அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் ஏற்கெனவே கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கண்டறியப்பட்டுள்ள பி.ஏ.5.2 மற்றும் பி.எஃப் 7 வகை திரிபுகள் கொரோனா மாறுபாடுகளிலே மிக மோசமானது என்றும், தீவிரமாக பரவும் தன்மை கொண்டது. தடுப்பூசி செலுத்திய நபர்களும் அதிகளவில் பரவும் திறன் கொண்டதாக இருக்கும் என மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் பல மாநில முதலமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தை முன்னெடுத்து இருக்கும் நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் பிற உயர் அதிகாரிகளுடன் இன்று அவசர கோவிட் ஆய்வுக் கூட்டத்தை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.