கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம் (திருத்த) மசோதா, 2023 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. லட்சக்கணக்கான சிறு, குறு நீர்வாழ் உயிரின வளர்ப்பு விவசாயிகள் பல நிறுவனங்களிடமிருந்து அனுமதிகளைப் பெறுவதற்கான தேவையைத் தவிர்க்க இந்த மசோதா பெரிதும் உதவும்.
கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் வளர்ச்சியற்ற பகுதிக்குள் குஞ்சு பொரிப்பகங்கள், குஞ்சுகள் பெருக்க மையங்கள், நியூக்ளியஸ் இனப்பெருக்க மையங்கள் போன்ற நீர்வாழ் உயிரின வளர்ப்பு அலகுகளை நிறுவுவதற்கு கடலோர நீர்வாழ் உயிரின ஆணைய (சி.ஏ.ஏ) சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யாமல் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பை மேற்கொண்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முதன்மை சட்டத்தில் வகைசெய்யப்பட்டுள்ளது. இது சிவில் தன்மை கொண்ட குற்றத்திற்கு மிகவும் கடுமையான தண்டனையாகத் தெரிகிறது. எனவே இந்தத் திருத்த மசோதா சிவில் மீறல்களை குற்றமற்றதாக்கும் கோட்பாட்டிற்கு ஏற்ப அபராதம் போன்ற பொருத்தமான நடைமுறைகளாக மாற்றுகிறது.
இந்தச் சட்டத்திருத்த மசோதா கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் சட்டத்தின் வரம்பிற்குள் முழுமையாக உள்ளடக்குவதற்கும், பண்ணை மற்றும் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பின் பிற பிரிவுகளுக்கு இடையில் முதன்மை சட்டத்தில் நிலவும் தெளிவற்ற தன்மையை நீக்குவதற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு நடவடிக்கைகள் எதுவும் இச்சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்படாமல், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் செயல்படுவதை உறுதி செய்ய முடியும்.