கோயம்புத்தூரில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தியுள்ளனர். தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையிலும், சிக்கிம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனை சில புதிய விதிகள் வகுக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில், லாட்டரி விற்பனையில் தமிழகத்தில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் என்பவர் முக்கிய பங்கு வகித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தான், கடந்த 2019 ஆம் வருடம், லாட்டரி அதிபர் மாட்டினுக்கு தொடர்புள்ள 70க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அக்டோபர் மாதம் 12ஆம் தேதியான இன்று சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து, கோவை மாவட்டம், துடியலூர் வெள்ளைக்கிணறு பகுதியில் இருக்கின்ற மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே கடந்த மே மாதம் அவருடைய மகன் மற்றும் நிர்வாகிகள் போன்றவர்களுக்கு தொடர்புள்ள பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும், மாட்டின் வடகிழக்கு மாநிலங்களிலும் இந்த லாட்டரி தொழிலில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.