கோவையில் MY V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் உள்ளிட்ட 70 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் கோவையில் இயங்கி வரும் MY V3 Ads ஆன்லைன் நிறுவனம் மீது கோவை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. ரூ.360 முதல் ரூ.1.20 லட்சம் வரை முதலீடுகளைப் பெற்று பொதுமக்களை ஏமாற்றுவதாகப் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த மாதம் இறுதியில் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த்தை விசாரணைக்கு அழைத்தனர். அப்போது திடீரென அவருக்கும் அந்த நிறுவனத்திற்கும் ஆதரவாக 1,000-க்கும் மேற்பட்டோர் கோவை நீலாம்பூர் L&T பைபாஸ் சாலையில் திரண்டனர்.
மோசடி புகாருக்கு உள்ளான நிறுவனத்திற்கு ஆதரவாக இப்படி பொதுமக்கள் திரண்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விசாரணை முடித்து அவரை போலீசார் அனுப்பி வைத்தனர். தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் தங்களுக்கு முதலீடுகள் வந்துள்ளதாக தெரிவித்த சக்தி ஆனந்த், நிறுவனத்தின் மீது சிலர் வீண் பழி போட முயல்வதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இணையத்தில் பலரும் மை வி3 நிறுவனம் குறித்துப் பேசவும் எழுதவும் தொடங்கினர்.
பலரும் இதில் மோசடி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பது போலவே கூறியிருந்தனர். இந்தச் சூழலில் தான் இப்போது கோவையில் மை வி 3 நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தன் மீதும் தனது நிறுவனம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட முயன்றார். இதையடுத்து, சக்தி ஆனந்த்தை போலீசார் கைது செய்தனர். அவருடன் தர்ணாவில் ஈடுபட முயன்ற 70 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.