இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தான ’கோல்ட் அவுட்’ (Cold Out)சிரப் உயிரைக் கொல்லும் அளவிற்கு ஆபத்தானவை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
`கோல்ட் அவுட்’ என்று முத்திரை பதிக்கப்பட்ட சிரப், தமிழ்நாட்டைச் சார்ந்த ஃபோர்ட்ஸ் லேபரட்டரீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த டாபிலைஃப் பார்மா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்த சிரப்பின் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மாதிரியில், ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு டைதிலீன் கிளைகோல் (0.25%) மற்றும் எத்திலீன் கிளைகோல் (2.1%) ஆகியன இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ஆகியவை மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவை. சில நேரங்களில் உயிரைக் கொல்லும் அளவிற்கு ஆபத்தானவை என்று கூறப்படுகிறது.
கடந்த ஒரு வருடத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளில் குறைந்தது ஐந்து மருந்துகள், உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. ஏனெனில், கடந்த ஆண்டுதான் காம்பியாவில் 66 குழந்தைகள் மற்றும் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளின் இறப்புக்கு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்து சிரப்கள்தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதேபோல், அமெரிக்காவில் இந்தியாவின் கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தியதால் குழந்தைகளுக்கு கடுமையான கண் தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. தொடர்ச்சியாக இந்திய மருந்து நிறுவனங்களின் தரம் குறித்த புகார்கள் எழுந்து வரும் சூழலில், அந்தந்த நாடுகளில் தரமற்ற மருந்து பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக உலக சுகாதார நிறுவனத்திற்கு தெரியப்படுத்துமாறு, தேசிய ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.