சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வரும் மாணவி ஒருவர், தேனாம்பேட்டையில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று, வழக்கம் போல் காலையில் கல்லூரிக்கு கிளம்பியுள்ளார். ஆனால் இரவாகியும் அவர் வீடு திரும்பவில்லை. நீண்ட நேரத்திற்கு பிறகு வீடு திரும்பிய மாணவியிடம், பதறிப்போன பெற்றோர் என்ன நடந்தது என்று விசாரித்துள்ளனர். அப்போது அவர், தான் ஆட்டோவில் கல்லூரிக்கு சென்றதாகவும், வழியில் ஆட்டோவை மறித்த 2 மர்ம நபர்கள், தனது முகத்தில் மயக்க மருந்தை தெளித்து ஆட்டோவில் தன்னை கடத்தி, சென்னை புறநகர் பகுதியில் தன்னை இறக்கி விட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இடையில் என்ன நடந்தது? என்று தெரியவில்லை என்று மழுப்பியுள்ளார். இதை நம்பிய அவரது பெற்றோர், மாணவியை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று, நடந்ததை கூறியுள்ளனர். அப்போது தேனாம்பேட்டை போலீசார், கோடம்பாக்கம் பகுதியில் இருந்து மாணவி கடத்தப்பட்டதால் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறியுள்ளனர். இதையடுத்து, கோடம்பாக்கம் காவல் நிலையத்துக்கு சென்ற மாணவியின் பெற்றோர் நடந்ததை கூறியுள்ளனர்.
இதையடுத்து, கடத்தல் கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும், தியாகராயநகர் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, பெண் சப்-இன்ஸ்பெக்டர் மாணவியிடம் தனியாக விசாரணை நடத்தியதில், மாணவி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். தொடர்ந்து, பெற்றோரை வெளியே நிற்க சொல்லிவிட்டு மாணவியிடம் விசாரித்ததில், மாணவி கல்லூரிக்கு போகாமல் காதலனுடன் சுற்றியதை மறைப்பதற்காக தனது பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடியது அம்பலமானது.
இதையடுத்து, போலீசார் மாணவியின் பெற்றோரிடம் உண்மை தகவலை தெரிவித்து, மாணவியையும் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.