தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், அரசு மகளிர் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்நிலையில், 20 வயதான மாணவி ஒருவர், திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாகக் கூறி வகுப்பறையில் இருந்து வெளியே சென்றுள்ளார். மாணவி உள்ளே வந்த போது, அவருக்கு கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தோழிகள், அந்த மாணவியிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது அவர், மாதவிடாய் காரணமாக ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறியுள்ளார். ஆனால் அந்த மாணவிக்கு, தொடர்ந்து ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததுடன், அவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், இது தொடர்பாக பேராசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பேராசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்து, கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மாணவியை அழைத்துச் சென்றனர்.
அங்கு, மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சற்று நேரத்திற்கு முன்பு மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளதாகக் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியில் ஆடிப் போன பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள், இது தொடர்பாக மாணவியிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் திருமணம் ஆகாத நிலையில் தான் கர்ப்பம் அடைந்துள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், தான் கர்ப்பமாக இருப்பதை தனது குடும்பத்தினர் மற்றும் கல்லூரிக்கு தெரியாமல் மூடி மறைத்துள்ளார்.
இந்தச் சூழலில் தான் வகுப்பறையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு, கழிவறையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதைத் தொடர்ந்து, அவர் யூடியூப் பார்த்து, தொப்புள் கொடியை வெட்டியுள்ளார். பின்னர் பிறந்த குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல், அவர் குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார். பின்னர், குழந்தை மீது குப்பைகளை போட்டு மூடியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்து போன மருத்துவ பணியாளர்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கல்லூரிக்கு சென்றனர்.
பின்னர், அங்கு குப்பைத் தொட்டியில் உயிருக்குப் போராடிய குழந்தையை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு, மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றினர். மாணவிக்கும், அரசு மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நாச்சியார் கோவில் போலீசார் மற்றும் ஆடுதுறை மகளிர் காவல்நிலைய போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.