தருமபுரி மாவட்டம் திருமலையாம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் 20 வயது கல்லூரி மாணவன். இவர், தனியாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தனது நண்பர்களுடன் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவரை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்ட ஒரு பெண், உங்களுடன் தோழியாக இருக்க விரும்புவதாக மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அதனை ஏற்றுக் கொண்டு மாணவரும் தொடர்ந்து அந்தப் பெண்ணுடன் பேசி பழகி வந்துள்ளார். அந்த பெண், தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்ப்பதாக மாணவனிடம் கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி இரவு 9 மணியளவில் மாணவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அந்த பெண், உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி, கல்லூரி மாணவனுடன் இருசக்கர வாகனத்தில் சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சென்று காத்துக் கொண்டிருந்தார். பின்னர், மீண்டும் மாணவரை தொடர்பு கொண்ட அந்தப் பெண், காங்கயம்பாளையம் அருகே பிரபலமான பிரியாணி கடை ஒன்று உள்ளது. அங்கு வந்தால் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டே பேசலாம் எனக்கூறியுள்ளார்.
பின்னர், அங்கு மாணவன் சென்றதும், மீண்டும் ஃபோன் அடித்த அந்தப் பெண், தனது தோழி வீடு அருகில் தான் உள்ளது. இங்கு வந்தால், இருவர் மட்டும் தனிமையில் சந்தித்துவிட்டு போகலாம் எனக்கூறி அழைத்துள்ளார். இதையடுத்து, மாணவனுடன் அங்கிருந்து புறப்பட்டு, அவர் சொன்ன வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென மாணவனை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக தாக்கியுள்ளது.
மேலும், மாணவன் அணிந்திருந்த 2 சவரன் தங்க செயினையும் பறித்துச் சென்றனர். பின்னர், அந்த கும்பலுடன் இன்ஸ்டாகிராம் தோழியும் சென்ற நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, பாதிக்கப்பட்ட மாணவன் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.