மின் தடை உள்ளிட்ட புகார்களை பெறுவது, மக்களிடம் ஆலோசனைகளை கேட்பது போன்ற பணிகளுக்கு சமூக வலைதளங்களில், தமிழக மின் வாரியம் அதிகாரப்பூர்வ கணக்குகளை துவக்கி உள்ளது.
பலரும் மொபைல் போன், கணினியில் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். இதனால், மத்திய அரசின் அனைத்து துறைகளும், அந்த துறைகளின் அமைச்சர்களும், ‘ட்விட்டர்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்குகளை தொடங்கி உள்ளனர். அவற்றில் தங்கள் துறையில் நடக்கும் நிகழ்வுகள், புதிய திட்டங்கள், அறிவிப்புகளை பதிவிடுகின்றனர்.தமிழக அரசும், அமைச்சர்களும் சமூக வலைதங்களை பயன்படுத்துகின்றனர்.
ஆனால், மின் வாரியம் சார்பில் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது, ‘ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்’ ஆகிய சமூக வலைதளங்களில் மின் வாரியம் கணக்குகளை துவக்கியுள்ளது. அதில், மின் சாதன பராமரிப்புக்காக மின் வினியோகம் நிறுத்தப்படும் இடங்கள், ‘டிஜிட்டல்’ மின் கட்டண விழிப்புணர்வு உள்ளிட்ட விபரங்கள் பதிவிடப்படுகின்றன. மின் தடை உள்ளிட்ட புகார்களை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்படும் ‘மின்னகம்’ நுகர்வோர் சேவை மையத்தில், 9498794987 என்ற மொபைல்போன் எண்ணில், 24 மணி நேரமும் தெரிவிக்கும் வசதி உள்ளது.
சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் புகார் மீது விரைந்து நடடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், மின் வாரிய செயல் திறனை மேம்படுத்துவது தொடர்பாக தெரிவிக்கப்படும் ஆலோசனைகளையும் கேட்டு செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.