கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த காலத்தில் மக்கள் தொடர்புகளைத் தடுக்க உலக நாடுகள் முழு ஊரடங்கு அறிவித்தன. இதன் காரணமாக நிறுவனங்கள் தங்கள் பொருளாதாரம் பாதிக்காமல் இருக்க ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதித்தது. இது ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும் தொடர்ந்து வருகிறது.
ஒரு சில நிறுவனங்கள் படிப்படியாக ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைத்துவிட்டனர். ஒரு சில நிறுவனங்கள், வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும் ஹைபிரிட் முறைகளை பின்பற்றி வருகின்றன. அந்த வரிசையில், இப்போது விப்ரோ நிறுவனம் சேர்கிறது என்று சொல்லலாம்.
இந்தியாவின் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனம், கட்டாய ஹைப்ரிட் வேலைக் கொள்கையை உருவாக்கியுள்ளது. இந்தப் புதிய விதியின்படி, ஊழியர்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாட்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரும் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த முடிவானது, TCS மற்றும் Infosys உள்ளிட்ட முக்கிய இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்களை வழிமொழிவதாக உள்ளது. இந்த மாற்றம் குழுப்பணியை மேம்படுத்துவதையும், தனிநபர் தொடர்புகளை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தாலும், பிராந்திய மாறுபாடுகள், உள்ளூர் சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களுக்கு இடமளிக்க சில நெகிழ்வுத்தன்மையை இது அனுமதிக்கிறது.
நவம்பர் 6ஆம் தேதி அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் விப்ரோவின் தலைமை மனித வள அதிகாரி சௌரப் கோயல், கலப்பின வேலை மாதிரியை நோக்கிய நகர்வு, நேருக்கு நேர் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், விப்ரோவின் நிறுவன கலாச்சாரத்தை வலுப்படுத்தவும், பயனுள்ள தகவல் தொடர்புகளை எளிதாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.