நாகர்கோவில் காசிக்கு எதிரான ஆதாரங்களை அழித்த வழக்கில் கைதான அவரது தந்தை தங்கபாண்டியனுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பணமோசடி மற்றும் பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய வழக்கில் நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்ற காசி, கடந்த 2020-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாலியல் குற்றச்சாட்டு குறித்த ஆதாரங்களை அழித்த வழக்கில் காசியின் தந்தை தங்கபாண்டியன் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி தங்கபாண்டி உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தங்கபாண்டியனுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், சாட்சியங்களை மிரட்ட கூடாது என்றும் சாட்சிகளை கலைக்கும் நோக்கில் செயல்பட கூடாது என்றும் விசாரனைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை நீதிபதி விதித்தார். நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் காவல்துறை உரிய நடவடிக்கைகள் எடுக்கலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.