நீதிமன்றக் காவலில் அல்லது போலீஸ் காவலில் இருக்கும் பெண் கைதிக்கு கன்னித்தன்மை சோதனை நடத்தப்படுவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரளாவின் கோட்டயத்தில் உள்ள செயின்ட் பயஸ் கான்வென்ட்டில் தங்கி இருந்த அபயா என்ற கன்னியாஸ்திரீ, மார்ச் 27, 1992, அன்று கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.. இந்த வழக்கை விசாரித்த கேரள போலீசார் அபயா தற்கொலை செய்து கொண்டார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.. இருப்பினும், அபயா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மனித உரிமை ஆர்வலர் ஜோமோன் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இதை தொடர்ந்து இந்த வழக்கை மார்ச் 29, 1993 அன்று சிபிஐ எடுத்து விசாரித்தது.. மேலும் 2008 ஆம் ஆண்டு, அபயா இருந்த கான்வெண்டில் பாதிரியார்கள் தாமஸ் கோட்டார், ஜோஸ் பூதிரிகல் மற்றும் கன்னியாஸ்திரீ செபி ஆகியோரைக் கைது சிபிஐ செய்தது.

சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் “ பாதிரியார்கள் தாமஸ், ஜோ மற்றும் செபி ஆகியோருக்கு தகாத உறவு இருந்துள்ளது.. கான்வென்ட் விடுதியின் சமையலறைக்குள் அவர்களை ஒன்றாக இருந்ததை அபயா பார்த்துவிட்டார்.. இந்த சம்பவத்தை அபயா வெளியில் சொல்லிவிடுவாளோ என்ற பயத்தில், தாமஸ் , செபி சேர்ந்து அபயாவை கொன்று அவரின் உடலை வளாகத்தில் உள்ள கிணற்றில் வீசியுள்ளனர்..” என்று தெரிவிக்கப்பட்டது..
இதனை தொடர்ந்து டிசம்பர் 2020 இல், திருவனந்தபுரத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றம் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரீ செபி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) மற்றும் பிரிவு 201 (ஆதாரங்களை அழித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த பரபரப்பான கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் எம். கோட்டூர் மற்றும் இணை குற்றவாளியான கன்னியாஸ்திரீ ஸ்டெஃபி ஆகியோருக்கு கேரள உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜாமீன் வழங்கியது.
இதனிடையே கன்னியாஸ்திரீ ஸ்டெஃபி, சிபிஐ தனது ஒப்புதல் இன்றி ‘கன்னித்தன்மை’ சோதனை நடத்தியதாக குற்றம் சாட்டினார். இது பெண்ணின் உரிமைகளை மீறுவதாக தேவாலயமும் ஆர்வலர்களும் குற்றம் சாட்டினர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், கன்னியாஸ்திரி அபயா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற மற்றொரு கன்னியாஸ்திரி செபிக்கு நடத்தப்பட்ட கன்னித்தன்மை சோதனை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று தெரிவித்துள்ள்ளது.. காவலில் உள்ள ஒருவரின் அடிப்படை கண்ணியம் இருக்க வேண்டும், ஆனால் இந்த வழக்கில் அது மீறப்பட்டது என்றும் நீதிபதி ஸ்வரணா காந்தா சர்மா அடங்கிய ஒற்றை நீதிபதி அமர்வு கூறியது.
மேலும் நீதிபதி “கன்னித்தன்மை பரிசோதனை” என்று சட்டப்பூர்வ நடைமுறை எதுவும் இல்லை என்றும், அத்தகைய சோதனை ஒரு மனிதாபிமானமற்ற சிகிச்சை என்றும் நீதிமன்றம் கவனித்தது. நீதித்துறை அல்லது காவல்துறை என விசாரணையின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அல்லது காவலில் உள்ள பெண் கைதிக்கு நடத்தப்படும் கன்னித்தன்மை சோதனை அரசியலமைப்பிற்கு விரோதமானது.. எனவே, இந்தச் சோதனை பாலியல் ரீதியிலானது, காவலில் இருக்கும் போது குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் அத்தகைய சோதனைக்கு உட்படுத்தப்பட்டால் கூட, அந்தச் சோதனை மனித உரிமையை மீறுவதாகவும் கருதுகிறது” என்று கூறினார்.