ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்றும் கூடிய விரைவில் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி. கூடிய விரைவில் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம். ஜெயலலிதா, எம்ஜிஆர் செய்த சேவை, அதனால் பயன்பெற்ற அனைத்து மக்களும் எங்களுடன் இருக்கிறார்கள். இதனால், இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக பொறுத்தவரைக்கும் ஜனநாயக முறையில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கழக உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக நானும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டோம். ஆகவே, நாங்கள் இருவரும் சேர்ந்து கையொப்பம் இட்டால் தான் இரட்டை இலை கிடைக்க வேண்டிய சூழல் இருக்கிறது.
அத்துடன், எடப்பாடி பழனிசாமி தாமாக சுயமாகக் கழக சட்ட விதிகளின் படி இல்லாமல் சட்ட விரோதமாகக் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக அறிவித்தார் தற்போது அது இல்லை. இந்த சூழ்நிலையில் தாமாகவே முன்வந்து இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். உறுதியாக இரட்டை இலை சின்னம் எங்களுக்குத் தான் கிடைக்கும். ஒன்றிணைய வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதைத்தான் நாங்களும் சொல்லுகிறோம். பாதை மாறிப் போனால் ஊர் வந்து சேராது. அதை எடப்பாடி பழனிசாமி தெரிந்து கொள்ள வேண்டும். ஓரிரு நாட்களில் விருப்ப மனு வாங்குவது குறித்து அறிவிக்கப்படும். கூட்டணிக் கட்சியில் இருப்பவர்களும் தேர்தலில் போட்டியிடுவதற்கு உரிமை இருக்கிறது. அது அவர்கள் விருப்பம்” என்று தெரிவித்தார்.