சீனாவில் உள்ள உஹான் உயிரியல் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்று அமெரிக்காவின் FBI உறுதிப்படுத்தி உள்ளது.
2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. எனினும் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பது தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது.. சீனா உன் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன..

இந்த சூழலில் சீனாவில் உள்ள ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம் என்று அமெரிக்காவின் எரிசக்தி துறை சமீபத்தில் தெரிவித்திருந்தது.. அமெரிக்காவின் உளவு அமைப்பான FBI அமைப்பும் தற்போது இதனை உறுதிப்படுத்தி உள்ளது. சீனாவின் உஹானில் நடந்த ஆய்வக சோதனையில் கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
FBI இயக்குனர் கிறிஸ்டோபர் ரே இதுகுறித்து பேசிய போது “ கொரோனா வைரஸ் சீனாவின் உஹானில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கசிந்திருக்கலாம். ஆனால் சீன அரசாங்கம் அதை மறைக்க முயற்சிக்கிறது.. நமது அமெரிக்க அரசு மற்றும் நெருங்கிய வெளிநாட்டு அரசுகள் செய்யும் வேலைகள் ஆகியவற்றை சீனா மறைக்க முயல்கிறது.. கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த விசாரணைப் பணிகளையும் சீனா தடுக்க முயற்சித்து வருகிறது..” என்று தெரிவித்தார்..
முன்னதாக, கடந்த 2021ல் சீனாவில் ஆய்வக கசிவு காரணமாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஏற்பட்டதாக அமெரிக்க உளவு அமைப்பான FBI கூறி இருந்தது.. சீனாவின் உஹான் மாகாணத்தில் பல ஆய்வகங்கள் உள்ளன.. உஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி, சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மற்றும் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் உஹான் இன்ஸ்டிடியூட் ஆப் உயிரியல் ஆய்வு மையம் ஆகியவை இதில் அடங்கும். ஆனால் உஹானில் உள்ள கடல் உணவு சந்தையில் முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவியது.. இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் உஹான் ஆய்வகத்தில் இருந்து கசிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது..
ஆனால் மறுபுறம் உலக சுகாதார அமைப்பின் விசாரணைகளுக்கு வரம்புகளை விதித்துள்ள சீனா, தங்கள் நாட்டின் ஆய்வகங்களில் இருந்து வைரஸ் கசியவில்லை என்று மறுத்துள்ளது.. மேலும் கொரோனா வைரஸ் சீனாவுக்கு வெளியே தோன்றியதாகவும் தெரிவித்துள்ளது. எனினும் சில விஞ்ஞானிகள், வைரஸ் இயற்கையாகவே தோன்றி இருக்கலாம் என்றும், ஒரு விலங்கிலிருந்து மனிதனுக்குப் பரவியிருக்கலாம் என்றும் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..