கேரளாவை அச்சுறுத்திவரும் ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்த நிலையில், வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கண்டறியப்படுவது மேலும் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 346 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் 1,324 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதால் பரிசோதனைகளும் அதிக அளவில் நடத்தப்படுகிறது. அதனால் பாதிப்பு எண்ணிக்கை கண்டறியப்படுவது அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோழிக்கோட்டைச் சேர்ந்த குமரன் (77), கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல்லா ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். அவர்கள் இறப்புக்கு வயது முதிர்வு மற்றும் இணைநோய்கள் காரணம் என்றும், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.