நீலகிரியில் தொடர் கனமழையால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும், இதர உட்கட்டமைப்புகளுக்கும் ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு செய்து அவற்றை உடனடியாக சீரமைக்கவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும், கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகரையும் நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன்.

மேலும், நீலகிரி மாவட்டத்தில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 160 வீரர்கள் அடங்கிய இரண்டு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. மேலும், பல்துறை மண்டல குழுக்களும், மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளதோடு, பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் ஜே.சி.பி. எந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் தொடர்புடைய துறை அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்”. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.