வட மாநிலங்களில் ஒன்றான இமாச்சலப்பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் லாஹல், ஸ்பிட்டி நகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கிராம்பு மற்றும் சோட்டா தர்ரா ஆகிய கிராமங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடைப்பட்டது. ஸ்பிடியில் இருந்து மணலிக்கு சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் 30 பேர் வழியில் சிக்கிக் கொண்டனர். பின்னர் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக ரியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மண்டியில் உள்ள அனைத்து அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மண்டி துணை போலீஸ் கமிஷனர் அரிந்தம் சவுத்ரி தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியவுடன் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.