தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மொத்தம் 17 பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளில் பழுதான பேருந்துகளை மீண்டும் புதிதாக கட்டமைப்பதும், பேருந்துகளின் பழுதுகளை சரி செய்வதும் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் நெல்லை மாநகர் வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தின் தாமிரபரணி பணிமனை, 700 பேருந்துகளின் பழுதை சரிபார்க்கும் பெரிய பணிமனையாக செயல்படுகிறது. ஆயிரம் தொழிலாளர்கள் வரை இந்த பணிமனையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தொடர் மழையால் திடீரென பணிமனையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த சுற்று சுவர் இடிந்து விழுந்த பகுதியானது பேருந்து இன்ஜினை சரி செய்யும் பகுதி. எதிர்பாராத விபத்து என்றாலும் சுற்றுச்சுவர் வெளிப்பக்கமாக விழுந்ததால் உயிரிழப்பு ஏற்படவில்லை என பணியில் இருந்த தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் சரவணனிடம், சுவரின் உறுதியற்ற தன்மை குறித்து பலமுறை எடுத்து சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சேதமாகி இருக்கும் பணிமனையின் சுவர்களை உடனடியாக சீரமைத்து பராமரிக்க வேண்டும் என தொழிலாளர்கள் விடுத்துள்ளனர்.