தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 9 மாநிலங்களில் உள்ள 115 மாவட்டங்களில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷண் அறிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷண் இன்று காணொலி வாயிலாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். கடந்த ஒரு மாதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் பெரும் கவலையுறச் செய்வதாக தெரிவித்தார். தொற்று பரவல் உள்ள மாவட்டங்களில் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொண்டார்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று விகிதம் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், மகாராஷ்டிரா, மிசோராம், அருணாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.